நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தது தமிழில் தான். பள்ளி பருவத்தில் பாடங்களை மனப்பாடம் செய்து எழுத ஆரம்பித்த நான் , பின்னாளில் மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தேன். இப்போது தமிழ் எழுத்துக்களை பார்ப்பது , படிப்பது தொலைக்காட்சி பெட்டியிலும் , ஆனந்த விகடனிலும் மட்டும், எப்போதாவது நாளிதள்களில். இன்னும் பயமாக இருக்கிறது இதில் எத்தனை பிழை வரும் என்று.

மூன்றாம் வகுப்பில் ‘வானத்திலே திருவிழா வழக்கமான ஒரு விழா’ என்று அந்த புத்தகத்தை பார்த்து படிக்கும் பொழுதினில் இருந்து , கற்பனை செய்ய ஆரம்பித்தேன், அன்று ஒரு நிஜமான மழையும் , வேகமாக வீசும் புயல் காற்றும் , பயத்தோடு கூடிய சந்தோசமும் கற்பனை கொண்டேன். அது இன்றும் இறந்து போனவரின் நினைவு போல அப்படியே இருக்கிறது. இப்போது மழை பெய்தாலும் அந்த புத்தகமும் , பள்ளி அறையும் , நான் கற்பனை செய்து கொண்டிருந்த மாலை பொழுதும் நினைவுக்கு வருகிறது. அது கண்ணாடி முன் தோன்றும் முகம் போல பிடித்திருக்கிறது.

குழந்தை பருவத்திலே ஒவ்வொரு நாளும் ஒரு இனிமையான நாள். குறிப்பாக தீபாவளி. எப்போதும் போல , காலை வேளையில் சுப்ரபாதம் , என் வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ ஒலித்து கொண்டிருக்கும். அப்போது மூக்குக்கு பிடிக்காத சாணி வாடைக்கு இப்போது மனம் ஏங்குகிறது. தெளிவாகவும் , நெகிழ்சியுடனும் இருக்கும் மனிதர்களின் முகங்களை பார்க்கும் போது , உறவினர்கள் போல தோன்றும். பட்டாசு , புது துணி , இனிப்பு , விளையாட்டு என்று , அந்த நாள் முடியும் போது , அடுத்த தீபாவளி எப்போது என்று காலண்டரை கை தேடும்.

என்னுடைய சில தீபாவளி நாட்கள் தஞ்சாவூரில் கழிந்தன. பேருந்தில் குடும்பமாக பயணம் செய்யும் பொழுது , ஜன்னல் ஓர இருக்கைக்காக சண்டை போடுவேன். சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் போது , குறிப்பாக , பேருந்து காவிரி ஆற்றை கடக்கும் போது , நான் ஜன்னல் ஓரத்தில் இருக்க வேண்டும். சேர , சோழ , பாண்டிய நாட்டு கதைகள் , பாடங்கள் என்னை காவிரியோடும் , தஞ்சையோடும் நட்புறவாட வைத்தன. தஞ்சை மண்ணின் வாசமும் , நிறமும் என்னை குதூகல படுத்தும். வாசலில் வந்து காத்திருக்கும் பாட்டியும் , அவள் எப்போதுமே வைத்திருந்த மிட்டாயும் மறக்க முடியாத புகைப்படமாகவே மாறி விட்டன. கடந்த சில வருடங்களாக தீபாவளியும். எப்போதாவது எடுத்து பார்த்து கொள்கிறேன் தனிமையில்.

கண்முன் தெரியாத , மனதிற்க்குள் மட்டும் தோன்றும் , காட்சிகளை , வார்த்தைகளை வைத்து , படிப்பவர் கண்களை பார்க்க செய்கிறவன் எழுத்தாளன். இன்று என்னை தமிழில் எழுத வைத்த மழைக்கு இது சமர்ப்பணம்.