வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் மிக இயல்பாக நடந்து முடிந்து விடுகின்றன. காலம் கடந்த பின்னும் அது நமக்கு பிடித்தவரின் பள்ளி இருக்கை போலவோ அல்லது கல்லுரி இருக்கை போலவோ நெஞ்சிலே தங்கி விடுகிறது.சுமைகளை மட்டுமல்லாது சில சுகங்களுக்கும் இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது மனது, அனைவர் குழந்தைகளையும் அரவணைக்கும் ஒரு ஆசிரியரை போல. எழுத்தாளனும், உவமையும் போல மனதிற்கும், வெளி உலகிற்கும் ஒரு தொடர்போ , இடைவெளியோ ஒரு தொடர்வண்டியை போல் , வலையில் தொங்கி கிடக்கும் சிலந்தி போல் , மீண்டும் ஒன்றாக இயங்கும் உத்தரவாதம் இன்றி உயிரோடு தான் இருக்கிறது. எதையும் உணர்த்தாமல் கூட சில வாக்கியங்கள் இனிக்க தான் செய்கிறது. எழுத்தாளனின் உலகம் சொர்க்கத்திற்கும் , மாநகர கழிவறைக்கும் இடையிலானது. அவனது ஆக்கங்கள் எப்போதுமே நாசி தேடி வந்து பரவும் நறுமணவாகவே இருக்கின்றன. வாழ்க்கை என்பதே நாம் நினைவில் வைத்திருக்கும் சில வாக்கியங்களாகவோ அல்லது வார்த்தைகளாகவோ மாறி விடுகின்றது.

தருணங்கள், ஞாபகங்கள், காட்சிகள், வார்த்தைகள், எவ்வளவு அழகாக இருக்கிறது வாழ்க்கை இயல்போடிருந்தால்.

ஞாபகங்களை, வார்த்தைகளில், துணி போல் நனைத்து உலர வைத்துள்ளேன், திரும்ப என்னிடமே வந்து சேரும் குளிர்ந்த தென்றலாய். உங்களுக்கும் தான்.